தென்காசி விவசாயியின் உடலில் 4 இடங்களில் காயம்..!
தென்காசியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டு உயிரிழந்த விவசாயி முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தென்காசியில் மின்வேலி அமைத்ததால் வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார்.
நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக வனத்துறை தரப்பிலும், வனத்துறையினர் தாக்கியதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரண்டாவது நாளாக விவசாயி உடலை வாங்க மறுத்த நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முத்துவின் மனைவி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பொங்கியப்பன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது விவசாய முத்துவின் உடற்கூறு ஆய்வறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் நிலை அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தமிழக அரசு தரப்பு தாக்கல் செய்தது. அதில் உள்ள விவரங்களை ஆராய்ந்த நீதிபதி பொங்கியப்பன் விவசாயி முத்துவின் உடலில் நான்கு இடங்களில் காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டார். பின்னர் உத்தரவுக்காக வழக்கை நீதிபதி நாளைக்கு ஒத்தி வைத்தார்.






