சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவும் ரஜினிகாந்த்..!
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ நடிகர் ரஜினிகாந்த் முன்வந்துள்ளார். இந்த தகவலை நடிகர் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
கலியுகம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் அவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் அவருக்கு நடிகர்கள் சரத்குமார், விஷால், கார்த்தி ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
பொன்னம்பலம் சிகிச்சை பெற்று வரும் தகவலை அறிந்த நடிகர் கமல்ஹாசன் அவருக்கு நிதி உதவி செய்ததுடன் அவரின் மகன் மற்றும் மகளின் கல்வி செலவுகளை ஏற்றுக் கொள்வதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் பொன்னம்பலத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்து அதோடு மட்டுமல்லாமல் அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.
லதா ரஜினிகாந்தும் பொன்னம்பலத்தை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். சிறுநீரகம் வழங்குபவர்கள் கிடைத்தவுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று பொன்னம்பலம் கூறியுள்ளார்.







