கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழாவில் உருக்கமாக பேசி கண்கலங்கிய ஸ்டாலின்..!
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் படத்தை அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான அன்பழகன் கொரொனா பாதிப்பால் கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார். திமுகவின் சார்பில் அவரது படத்திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் இல்லத்தில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் அன்பழகனின் படத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி, ஜெ அன்பழகன் மனைவி சுந்தரி அன்பழகன், மகன் ராஜா அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்பழகனின் படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுக பொருளாளர் துரைமுருகன் ஆர் எஸ் பாரதி, கனிமொழி எம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஜெ அன்பழகன் உடனான நினைவுகளை திமுக நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர்.
திமுகவின் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்த ஜெ அன்பழகன் கொரொனாவில் இருந்து மக்களைக் காக்கும் போராட்டத்தில் தன் உயிரை இழந்து இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். காணொளி காட்சி மிப்ப்லம் நடைபெற்ற புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஜெ அன்பழகன் உடனான தனது நினைவுகளை குரல் தழுதழுக்க பகிர்ந்துகொண்டு ஸ்டாலின் உருக்கமாகப் பேசி கண் கலங்கினார்.







