சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் சித்ரவதை மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட மேலும் 4 காக்கிகள் கைது!!
சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ .ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் இரவு முழுவதும் சிபிசிஐடி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜ் ஆகிய மேலும் 4 காக்கி சாத்தான்களை கைது செய்தனர்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் காக்கிகளின் கொடூர சித்ரவதையில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த இருவரின் மரணத்திற்கு நீதி கேட்டும், சித்ரவதை செய்த கொடூர காக்கிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும் போராட்டங்கள், கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், இந்த காவல் சித்ரவதை மரணத்தை தாமாக முன் வந்து விசாரனைக்கு எடுத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த வழக்கை உடனடியாக கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு தாமதமாகும் என்பதால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், உடனடியாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரும் நியமிக்கப்பட்டார்.

இதனால் சிபிசிஐடி போலீசார் களத்தில் குதித்தனர். விசாரணையும் விறு விறு விறுப்படைந்த நிலையில், ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பு தொடர்பாக, அரசு பாதுகாப்பில் சந்தேக மரணம் என நேற்று காலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின் நேற்றிரவு இரவு தந்தை, மகன் இருவரின் உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரையும் மிருகத்தனமாக சித்ரவதை செய்ததாக அங்கு பணியில் இருந்த காக்கி சாத்தான்கள் 6 பேரின் பெயர்கள் இடம் பெற்றது.இவர்கள் மீது இ.பி.கோ. பிரிவு 302 ( கொலை) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவே இந்த சித்ரவதை படுகொலையின் முக்கிய சூத்ரதாரியான எஸ்.ஐ. ரகு கணேஷை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைதும் செய்தனர்.

தொடர்ந்து மற்றவர்களையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி நேற்று இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மற்றொரு எஸ்.ஐ.யான பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜ் ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். மேலும் சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடமும், காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி என்ற வகையில் இரவு முழுவதும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரண வழக்கில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X“இந்த வழக்கில் அரசு டாக்டர்கள், சிறை வார்டன்கள் உள்ளிட்டோரிடமும் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சித்ரவதை படுகொலை சம்பவத்தில் உடந்தையாக இருந்த மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்பதால் பரபரப்பான கட்டத்திற்கு சாத்தான்குளம் சம்பவ வழக்கு சென்று கொண்டுள்ளது.”






