யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யூடியூப் பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடலூர் அருகே பள்ளிபடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் காரக்குண்டம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சதீஷ் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது சதீஷின் அறையில் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரம், கணினி சாதனங்கள், 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது யூடியூப் பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடித்ததை சதீஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த கள்ள நோட்டுகளை யாரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காலையில் பெட்ரோல் பங்குகள், மதுபான கடைகள் ஆகிய இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் சதீஷ் எத்தனை நாட்களாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்? அவருடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






