--- --:--:-- --

பொது முடக்கத்தால் வறுமையில் வாடிய ஊழியருக்கு உதவிய இர்பான் பதான்!

12

கொரொனா பொது முடக்கத்தால் வருவாய் இழந்து தவித்த சென்னையை சேர்ந்த காலனி தைப்பவருக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பண உதவி செய்துள்ளார். அதி தீவிர கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட சென்னையில் கிரிக்கெட் தாகத்தை தணிக்கும் களம்தான் சேப்பாக்கம் மைதானம். இங்கு நடைபெறும் போட்டிகளின் போது வீரர்களை தூரத்திலிருந்து காண ரசிகர்கள் அலை மோதுவார்கள்.

 

ஆனால் வீரர்களின் ட்ரெஸ்ஸிங் ரூம் வரை சர்வ சாதாரணமாக சென்று வருபவர்தான் இந்த பாஸ்கரன். சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே 1993-ஆம் ஆண்டு காப்லராக உள்ளார் பாஸ்கரன். அதாவது வீரர்களின் காலனி, ஹெல்மெட், க்ளவுஸ் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பழுதுகளை சரி செய்து கொடுப்பவர்.

 

சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, தற்போதைய கேப்டன் விராட்கோலி உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் என அனைவருமே பாஸ்கரனின் வாடிக்கையாளர்கள். இவரது பணியை அங்கீகரித்து குட் ஜாப் என பாராட்டிய வீரர்களும் உண்டு. கொரொனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடை பெற்றிருப்பதால் மைதானத்திற்கு வரும் வீரர்களையே நம்பியிருந்த பாஸ்கரனின் வாழ்வாதாரம் முடங்கிப்போனது.

 

வருமானம் இன்றி தவித்து வந்த சூழலில் பாஸ்கரனின் வாடிக்கையாளராகவும் நன்கு பரிச்சயமானவர் ஆகவும் இருந்த இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அவருக்கு ஆதரவு கரம் நீட்டி உதவியுள்ளார். 25 ஆயிரம் ரூபாய் பண உதவி வழங்கி பாஸ்கரனின் நெருக்கடியை சற்றே குறைத்துள்ளார் இர்பான் பதான்.

 

தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தது உடன் பணம் போதுமா என கேட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் பாஸ்கரன். இர்பான் பதானின் மனிதநேயமிக்க செயலை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

 

முழு பொது முடக்கம் தொடங்கியது முதலே தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள ஏழைகளுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பதான் சகோதரர்கள் உதவி வருவது நினைவுகூறத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon