--- --:--:-- --

திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் கருணாஸ் எம் எல் ஏ ஆய்வு

15

குடிமராமத்து திட்டத்தின் கீழ், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலமனேந்தல் கிராமம், தோட்டமங்கலம் கிராமம் ஆகியவற்றில் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கருணாஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை பாதுகாத்திடவும் , மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் அளவினை உயர்த்திடவும் , விவசாய பெருமக்களின் நலன் காத்திடவும் சீரிய நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள் .

 

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கண்மாய்களின் பாசன விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டு கண்மாய்களில் கரைகளை பலப்படுத்துதல் , மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம் , கழுங்குகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம் , வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல் , சிமக்கருவேலை மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களின் மூலம் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்போடு வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது .

இராமநாதபுரம் மாவட்டத்தில் , குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ .10.06 கோடி மதிப்பில் 14 கண்மாய்களிலும் , 2017-18ம் நிதியாண்டில் ரூ .29.55 கோடி மதிப்பில் 58 கண்மாய்களிலும் , 2019-20ம் நிதியாண்டில் ரூ .37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களிலும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 141 பொதுப்பணித்துறை கண்மாய்களுக்கு உட்பட்ட 30,55,890 கனமீட்டர் கண்மாய்கள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன .

 

மேலும் , 339 மடைகள் , 79 கலுங்குகள் புதுப்பிக்கப்பட்டும் , சீரமைக்கப்பட்டும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன . நடப்பு நிதியாண்டில் ( 2020-21 ) ரூ .38.79 கோடி மதிப்பில் 61 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது , குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் , சரியாக நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்திடவும் , ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையுடன் ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றப்படுகிறது .

 

நீர்பிடிப்பு பகுதியின் எல்லைகளை கண்டறிந்து எல்லைக் கற்களும் நடப்படுகிறது . மேலும் , புனரமைப்புப் பணிகள் துவங்குவதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக பணி முன்னேற்றம் குறித்து வாரம் ஒருமுறை ஊர் பொதுமக்களிடையே கூட்டம் நடத்தி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட விவசாயிகள் பாசன சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் , இப்பணிகளை மேற்கொள்ளும்போது ஒருவருக்கு ஒருவர் போதிய சமூக இடைவெளி கடைபிடித்திடவும் , முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பணியாற்றிடவும் வேண்டும் என தெரிவித்தனர்.

அந்த வகையில் , இராமநாதபுரம் வட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அலமனேந்தல் கண்மாயின் புனரமைப்புப் பணிகள் ரூ .54.50 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இக்கணமாயானது 28.34 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பளவு கொண்டது . இக்கண்மாயில் 1.310 கி.மீ நீளம் கரையை பலப்படுத்துதல் , 1.6 கி.மீ வரத்துக்கால்வாய் தூர்வாருதல் , 2 மடை மீளக்கட்டுதல் , 1 கழுங்கு மறுகட்டுமானம் மற்றும் சீமைக்கருவேள மரங்களை அகற்றுதல் போன்ற புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

 

அதேபோல , திருவாடானை வட்டம் , தோட்டமங்கலம் கிராமத்தில் ரூ .99.90 இலட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இக்கண்மாயானது 159.85 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பளவு கொண்டது . இக்கண்மாயில் 4.6 கி.மீ நீளம் கரையை பலப்படுத்துதல் , 3 கி.மீ வரத்துக்கால்வாய் தூர்வாருதல் , 8 மடை மீளக்கட்டுதல் , 1 கழுங்கு பழுதுபார்த்தல் மற்றும் சீமைக்கருவேள மரங்களை அகற்றுதல் போன்ற புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

 

இந்நிகழ்வின் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.கார்த்திகேயன், சிவராமகிருஷ்ணன் , உதவி பொறியாளர் பரமேஸ்வரன், பிரபா , வட்டாட்சியர்கள் முருகவேல் , ஆர்.மாதவன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திரன் , அப்துல்ஜபார் ,ராஜா , பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் , கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon