--- --:--:-- --

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் ! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

8

ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்பதை மாற்றி நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கை மே 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

அப்போது ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமாரின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது. மேலும் போயஸ் தோட்டத்தை முழுமையாக ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்வது, முதல்வர் அலுவலகமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை அரசுக்கு நீதிமன்றம் வழங்கியது.

 

இந்நிலையில் இந்த உத்தரவில் சில திருத்தங்களை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன்படி இரண்டாம் நிலை வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று அறிவித்துள்ளது. இரண்டாம் நிலை வாரிசுகள் என்று தங்களை அறிவிக்க வேண்டுமென்று ஜெ தீபா, ஜெ தீபக் ஆகியோர் வழக்கு தொடுத்தால் அதனடிப்படையிலேயே மே 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது ஒரு ஆண் இறந்தால் அந்த சொத்துக்கள் எப்படிப்பட்ட வாரிசுகளுக்கு போகும் என இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 8 சொல்கிறதோ அதன் அடிப்படையில் அந்த தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை இறந்தவர் பெண் என்பதாலும் அவருக்கு திருமணம் ஆகாததாலும் அவருடைய சகோதரர்களின் பிள்ளைகளுக்கு சொத்து செல்லும்போது இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 16 இன் படி நேரடி வாரிசுகள் என தான் கருதப்படுவார்களே தவிர நிலைகள் பிரிக்கப்படாது.

 

எனவே அதன் அடிப்படையில்தான் நீதி மன்றம் தீர்ப்பில் திருத்தத்தை செய்திருப்பதாக வழக்கறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். ஜெயலலிதாவின் வாரிசு என்ற தீர்ப்பை அதிமுகவினர் தலைவணங்கி ஏற்க வேண்டும் என ஜெ தீபா செய்தியாளர்களை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon