தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவானது.
அதிகமாக திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவானது. வேலூரில் 104.5, சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் கடலூர் மற்றும் கரூர் பரமத்தி 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது .
புதுச்சேரியில் 101 டிகிரி வெப்பம் பதிவானது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை மறுநாள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.






