திருப்பதியால் ஏற்பட்ட அதிருப்தி: கொரோனா நிவாரணம் தருவதில் கோஷ்டி மோதல்! திருப்பூர் மாநகர அதிமுகவில் உச்சகட்ட பூசல்!!
கோடை அக்னி நட்சத்திர வெயிலைவிட, திருப்பூரில் அரசியல் சூட்டை கிளப்பி இருப்பது, நிவாரணப்பொருட்களை வழங்குவதில் அதிமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் தான். கொரொனா உதவிப் பொருட்களை வழங்க வந்த மாஜி அமைச்சர் ஆனந்தன் தரப்பினருக்கு, அன்பகம் திருப்பதி கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம், டாலர் சிட்டியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
கொரொனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்களின், குறிப்பாக ஏழை எளியோரின் வாழ்வாதாரம் முடங்கியது. அத்தகைய மக்களுக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நேரம் காலம் பார்க்காமல் உதவி வருகின்றன. திருப்பூரிலும், கொரொனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு, அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.
ஆனால், திருப்பூர் மாநகர அதிமுகவில் கொரொனா நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் நீயா நானா என்ற போட்டி நிலவுவதுதான் கொஞ்சம் கவலை அளிக்கும் விஷயமாகும். நிவாரணப் பொருட்களை வழங்குவதில் நிலவும் கோஷ்டி மோதல், திருப்பூர் மாநகர அதிமுகவுக்குள் கொரோனாவைவிட பூதாகரமாக வெடித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட கே,வி,ஆா்.நகர் பகுதியில், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக ஷாமியானா பந்தல் அமைத்து, தனிமனித இடைவெளியில் பொருட்களை வழங்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு, சுமார் 1500 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதே பகுதியை சேர்ந்த, ஒரு காலத்தில் அமைச்சர் ஆனந்தனின் கண் அசைவுக்கு ஓடியாடி வேலை செய்து வந்த முன்னாள் கவுன்சிலரான அன்பகம் திருப்பதி தரப்பினருக்கு, இந்த விஷயம் கடும் எரிச்சலை தந்தது. எங்கள் பகுதிக்கு நீங்கள் எப்படி வந்து நிவாரணப் பொருட்களை தரலாம் என்று கேட்டு, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க, ஆனந்தன் ஆதரவாளர்களோ திகைத்து போனார்கள். கட்சியினருக்கு உதவி என்றால், உள்ளூர் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கலாம்.
இது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொது நிகழ்ச்சி தானே? இதற்கு ஏன் தடங்கல் ஏற்படுத்துகிறீர்கள் என்று, ஆனந்தன் தரப்பினர் மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதும், அன்பகம் திருப்பதி ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பில் உறுதியாக இருந்தனர். இதனால், பொதுமக்களுக்கு கொரொனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாதியில் நின்று போனது.

இந்த விவகாரம் பற்றி முன்னாள் கவுன்சிலரான அன்பகம் திருப்பதியிடம், ’குற்றம் குற்றமே’ இதழ் சார்பில் கேட்டோம். அவர் கூறுகையில், ”என்னிடம் தெரிவிக்காமல் எனது பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வந்தனர். என்னிடம் முன்பே சொல்லியிருந்தால், அதற்கேற்க பயனாளிகளின் பட்டியலை தந்திருப்பேன்.
அவர்கள் தரப்பில் 500 பேருக்கு பட்டியல் எடுத்து வந்தனர். ஆனால், 1,500 பேர் உள்ள நிலையில், பொருட்கள் கிடைக்காத மற்றவர்கள், என் வீட்டிற்கு தான் வருகின்றனர்; நிவாரணப்பொருட்களை கேட்டு என்னிடம் முறையிடுகின்றனர். இங்குள்ளவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது? பொதுமக்களுக்கு தருவது என்றாலும், கட்சி சார்பில் தானே தரப்படுகிறது. எனவே பயனாளிகள் பட்டியலை கேட்டேன். அதை எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளனர். இன்னும் வரவில்லை” என்று நாசுக்காக பதில் சொல்லி சமாளித்தார்.
மக்களுக்கு சேவை செய்ய ஆனந்தனாக இருந்தால் என்ன? அன்பகமாக இருந்தால் என்ன? இதில் எதற்கு நீயா- நானா போட்டி? எது எப்படியோ, அதிமுகவின் கோஷ்டி பூசலில் அப்பாவி மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது தடைபட்டது தான் இதில் பெரும் சோகம். அன்பகம் திருப்பதியால் நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் போய்விட்டதே என்று, அவர் மீது பலர் அதிருப்தியில் உள்ளனர்.

கட்சி நிகழ்ச்சியா? பொதுநிகழ்ச்சியா?
இந்த விவகாரம் குறித்து, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தரப்பை, ’குற்றம் குற்றமே’ இதழ் தரப்பில் தொடர்பு கொண்டோம்.
அவரது உதவியாளர் அளித்த பதிலில், கருவம்பாளையம் பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்றோம். ஆனால், எங்களிடம் தெரிவிக்காமல் நீங்கள் எப்படி நிவாரண உதவிகளை தரலாம் என்று, அன்பகம் திருப்பதி தரப்பினர் தகராறு செய்தனர்; பந்தலை பிரித்து போட்டனர். நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியும் பாதியில் நின்று போனது.
இது கட்சி நிகழ்ச்சி அல்ல; பொதுமக்களுக்கான நிகழ்ச்சி. இதற்கு ஏன் உள்ளூர் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பயனாளிகளின் பட்டியலை பெற்று, நிவாரணப் பொருட்களோடு வருகிறோம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டோம் என்றார்.
பதவி இருந்தால் பணிவு…இல்லாவிட்டால் பகை…!
📱 Share on WhatsApp 𝕏 Share on Xஒருகாலத்தில், அமைச்சராக ஆனந்தன் இருந்த போது, அவரது கண் அசைவிற்கு வேலை பார்த்தவர் அன்பகம் திருப்பதி; தற்போது தெற்கு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளராகி, ஆனந்தனுக்கு எதிராக காய்களை நகர்த்தி வருவதாக, உள்ளூர் உடன்பிறப்புகளே முணுமுணுக்கின்றனர்.
பதவி இருந்தபோது பணிவு; பதவி இல்லாவிட்டால் பகையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த பகைதான், நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் புகைச்சலை கிளப்பி இருப்பதாக, அவர்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
அதிமுக மாவட்ட செயலாளரின் பெயரை கெடுக்க, அன்பகம் திருப்பதி தரப்பினர் இப்படி நடந்து கொள்வது, ஆளும் கட்சிக்கு தானே கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று உடன்பிறப்புகள் பலர் ஏக கடுப்பில் உள்ளனர்.






