B.C.S பட்டப்படிப்பு B.Com பட்டப்படிப்புக்கு இணையானது என சான்று வழங்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு!
பிசிஎஸ் பட்டப்படிப்பு, பிகாம் பட்டப்படிப்புக்கு இணையானது என்று சான்று வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின்பகிர்மான பிரிவில் கணக்கு உதவியாளராகப் பணியாற்றும் கலைவாணி என்ற பெண் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் பிசிஎஸ் படிப்பு பிகாம் பட்டப்படிப்புக்கு இணையானது என சான்று இல்லாத காரணத்தால் கணக்கு மேற்பார்வையாளர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலில் தன்னுடைய பெயர் பரிசீலிக்கப்பட இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது பிசிஎஸ் படிப்பு பி காம் பட்டப்படிப்புக்கு இணையானது என அரசாணை வெளியிட்டுள்ளது தெரியவந்திருப்பதாக கூறியுள்ள மனுதாரர் அந்த அரசாணையின்படி சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
நீதிபதி முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுபோன்று சான்று தரப்படுவதாக கூறினார். இதனையடுத்து பிசிஎஸ் பட்டப்படிப்பு பிகாம் பட்டப்படிப்புக்கு இணையானது என சான்று வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.






