குழந்தையின் அழுகை மன வலியை தருகிறது..!புலம்பெயர் தொழிலாளர்கள் கதறல்!
சென்னையிலிருந்து ஒடிசாவிற்கு நடந்து செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். சொந்த ஊரில் தவிக்கும் தங்கள் குழந்தைகளை காணவே நடந்து செல்ல முடிவு எடுத்ததாக தொழிலாளர்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் சென்னை கட்டிட வேலைக்காக வந்தவர்கள் வேறு வழியின்றி ஒடிசாவுக்கு கிளம்ப முடிவு செய்தனர். மூட்டை முடிச்சுடன் கால்நடையாக பயணிக்க ஆரம்பித்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உரிய அனுமதியுடன் ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் கவலை தோய்ந்த முகத்துடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வடமாநில தொழிலாளர்கள் மூன்று மாதமாக வேலை இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள். ஊரடங்கை முடித்து விடுவார்கள் என எதிர்பார்த்தால் நீட்டித்துக் கொண்டே செல்வதாகவும் அவர்கள் ஊரில் வசிக்கும் பெற்றோர் தங்களை நினைத்து கவலையுடன் இருப்பதாக கூறுகிறார்கள்.
இரண்டு மகன்களையும் ஒடிசாவில் தவிக்க விட்டு சென்னைக்கு பிழைக்க வந்ததாக கூறும் பெண்மணி ஒருவர் தங்கள் பிள்ளைகள் நாள்தோறும் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை பார்க்க வேண்டுமென கூறுவதாகவும் இந்த வலியை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் வேதனையுடன் கூறுகிறார்.
ஒரு வயது குழந்தையை பிரிந்து கட்டிட பணிக்காக சென்னை வந்திருக்கும் சுமித்ரா தனது குழந்தையின் அழுகை மன வலியை தருவதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். சொந்த ஊருக்கு ரயில் வசதியை ஏற்படுத்தி தராவிட்டாலும் பரவாயில்லை நடந்து செல்ல அனுமதி தாருங்கள் என புலம்பெயர் தொழிலாளர்கள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.






