கொரொனா தடுப்பு பணிக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரிக்கை!
ஊரடங்கு முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரொனா தடுப்பு பணிக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மருத்துவ உபகரணங்கள் வாங்க சிறப்பு நிதியாக 2,000 கோடி ரூபாய் தேவை எனக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக 2,500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதலான உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் விட வேண்டாம் என வலியுறுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 31-ஆம் தேதி வரை ரயில், விமான சேவைகளை நிறுத்தி வைக்குமாறு யோசனை தெரிவித்தார்.
விவசாயிகளின் போக்குவரத்து செலவுகளுக்கு மத்திய அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.






