தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்!
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பத்து இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தது.
முதல் நாளில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவான நிலையில் இரண்டாவது நாளிலும் 10 பகுதிகளில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலைய பகுதிகளில் 103.64 என்ற அளவில் வெப்பம் பதிவானது.
இதேபோன்று நாமக்கல், கோவை, தர்மபுரி, பாளையங்கோட்டை, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.






