100 நாள் வேலை திட்டத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை கொடுப்பதாக வேதனை!
100 நாள் வேலை திட்டத்தில் மாதம் மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொது முடக்கம் காரணமாக முதலில் ரத்து செய்யப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அதன் பின்னர் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது.
தனிமனித இடைவெளியை கடைபிடித்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபடவேண்டும். 50 வயதைக் கடந்த முதியவர், நோயாளிகளுக்கு வேலை வழங்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாதம் மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது என்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லை எனவும் திருச்சி மாவட்டம் முல்லைகுடியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
அந்தநல்லூர் , மணிகண்டம் உள்ளிட்ட ஒன்றியங்களில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன . திருவரம்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முல்லைக்குடி கிராமத்தில் முக கவசம் அணிந்து கொண்டு தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலை திட்ட பணிகளை பெண் கூலித் தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.
தங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் தினமும் வேலை வழங்க வேண்டும் அல்லது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.






