கொரோனாவுக்கு தாய், சேய் உயிரிழப்பு..! அதை அறியாமல் இறுதி சடங்கில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சி!
சென்னையில் நாளுக்கு நாள் கொரொனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தனக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் பலியானார்.
தாய் மற்றும் செயின் சடலங்கள் உடனடியாக கணவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவரது சடலங்களையும் ஊர்கூடி அடக்கம் செய்தனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்குக் கொரொனா தொற்று உறுதி என ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் கொரொனா முடிவு வெளியாவதற்கு முன்பாகவே சடலத்தை ஒப்படைத்ததால் இறுதி சடங்கில் பங்கேற்ற கணவன் உள்ளிட்ட உறவினர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
மேலும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்களையும் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். அதோடு இல்லாமல் அன்றைய தினம் அந்த மருத்துவமனையில் பிரசவ வார்டு வந்து சென்றவர்களையும் அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 100 பேர் வரை தங்களை கொரொனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு கொரொனா தொற்று இருக்கும் என்பது தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
அதேபோல கடந்த 45 நாட்களாக ஓட்டேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கடைவீதிகளில் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊர் காவல் படை வீரருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் பணியில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அவரும் அவரது மனைவியும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரொனா எங்கே? யாருக்கு ?யாரிடமிருந்து? எப்படி? தொற்றுகிறது என்பதை கடந்து பரவி வருவதால் கடை வீதிக்கு செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள் வீட்டிற்குள் செல்லும் முன்பாக கை கழுவி கொண்டு சுத்தம் செய்த பின்னர் வீட்டிற்குள் நுழைவது அனைவருக்கும் நலன் பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். கூடுமானவரை தனித்திருப்போம் வீட்டிலேயே விலகி இருப்போம்.







