“அமெரிக்காவில் உயிரிழப்பு அரை லட்சத்தை தாண்டியது!!”உலக அளவில் பாதிப்பு பட்டியலில் 16-வது இடத்தில் இந்தியா !!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்து உயிரிழப்பு 722 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 27 லட்சத்து 25 ஆயிரத்து 920 ஆகவும், உயிரிழப்பு1,91,061 ஆக உயர்ந்து 2 லட்சத்தை எட்டி வருகிறது. இதில்
கொரோனாை வைரஸ் தாக்குதலால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இத்தாலி (25, 549), ஸ்பெயின் (22159), பிரான்ஸ் (21,850), இங்கிலாந்து (18738) ஆகிய நாடுகளில் உயிரிழப்பு கணக்கிலடங்காமல் உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அந்நாடுகளில் உயரிழப்பும், பாதிப்பும் சற்று குறைந்து வருவது நிம்மதி அளிப்பதாக உள்ளது.
ஆனால் அமெரிக்காவில் தான் கொரோணா பாதிப்பு இன்னும் உச்சக்கட்ட ஆட்டமாக உள்ளது. அங்கு தினமும் 30 முதல் 40 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், எண்ணிக்கை 8,86,709 என அதிகரித்தும், உயிரிழப்பும் விறுவிறுவென உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2325 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை அரை லட்சத்தை கடந்து 50,243 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பின் தாக்கத்தால் தினமும் 1500 பேர் வரை பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் மொத்த பாதிப்பு 23,502 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 722 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 22-வது இடத்தில் இருந்த நிலையில் இப்போது 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் பாதிப்பும் (6450), உயரிழப்பும் (296) கிடு கிடுக்க வைக்கிறது. அடுத்தபடியாக குஜராத் (2860) மாநிலத்தில் கடந்த 2 , 3 தினங்களாக பாதிப்பு வேகமாகி வருகிறது. டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தமிழகம் பாதிப்பில் 5 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







