பாலிவுட் சினிமா தொழிலாளர்கள் 23,000 பேரின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6.9 கோடி..! சல்மான்கான் தாராளம்!!
கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து தவிக்கும் பாலிவுட் சினிமா தினக்கூலி தொழிலாளர்களுக்கு இந்தி திரையுலகின் பிரபலம் சல்மான் கான் ரூ.6.9 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். இந்தத் தொகையை உஷாராக 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3000 வீதம் வரவு வைத்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதை பலரும் பாராட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள், அன்றாடம் கூலி வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள், சாலையோரம் வியாபாரம் செய்து தினசரி வருவாய் ஈட்டுவோரும், பணிப் பாதுகாப்பு இல்லாத குறைந்த மாத வருவாய் உள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோடிகளில் புரளும் திரையுலகில், தினக்கூலிகளாக பணியாற்றும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் முடங்கிப் போய் பரிதவிக்கிறார்கள்.
இதனால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதி திரட்டப்பட்டு வருவது போல், இந்தி திரையுல தொழிலாளர்களுக்கும் நிதி திரட்டப்பட்டு, பிரபல நடிகர், நடிகைகள் உள்ள திரையுலக முக்கியப் புள்ளிகள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இதில் இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் வித்தியாசமாக, தாம் வழங்கும் நிவாரண உதவி நேரடியாக பாதிக்கப்பட்டோருக்கு செல்ல வேண்டும் என கருதியுள்ளார். இந்தி திரையுலக சினிமாத் தொழிலாளர்கள் பட்டியலையும், அவர்களின் வங்கிக் கணக்கையும் அவர்களின் சங்கம் மூலம் கேட்டுப் பெற்றார். மொத்தம் 23 ஆயிரம் தொழிலாளர்களின் பட்டியல் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அடுத்த நிமிடமே தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் 6.9 கோடி ரூபாயை அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார். சல்மான்கானின் இந்த நல்லெண்ணத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.
இதேபோல், தமிழ் நடிகர் ராகவா லாரன்சும் தாராளமாக ரூ.3 கோடி ரூபாயை தலா 50 லட்சம் வீதம் பிரித்துக் கொடுத்துள்ளதும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. லட்சம், சினிமா தொழிலாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு தலா ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் என ரூ.3 கோடி நிவாரண உதவியை ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.







