ஒற்றைக்கால் தவம்..! ஒற்றைகாலில் நின்னா கொரொனா வராத சார்..! வராது தம்பி கால் வலி தான் வரும்!
ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் தமிழகத்தில் இருசக்கர வாகனத்திலும் கூட்டாளிகளும் கால நேரமின்றி அவிழ்த்துவிட்ட காளைகளை போல சுற்றித்திரிந்த தம்பிகளை விசித்திரமான தண்டனை வழங்கி போலீசார் நெம்பி எடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிக்கிய 3 ஊர்சுற்றிகளை தவளை போலத் தாவி சென்று தூரத்திலிருக்கும் லாரியை தொடும் தண்டனை வழங்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் சிக்கிய தம்பிகளை ஒற்றைக்காலில் நிற்க வைத்து நூதன வைத்தியம் செய்த காவல்துறையினர் அவர்களுக்கு கொரொனா நோய் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். அப்போது ஒற்றைக்கால் தவம் செய்த தம்பி ஒருவர் சார் ஒத்த காலில் நின்றால் கொரொனா வராதா என முனுமுனுக்க பதிலுக்கு போலீசாரும் நிச்சயம் கொரொனா வராது ஆனால் கால் வலி வரும் அதனால் வீட்டிலேயே இரு என்று எச்சரித்து அனுப்பினார்.

அதேபோல பூந்தமல்லியை அடுத்த குமரன் சாவடி பகுதியில் வீதியில் வீணாக சுற்றியதால் காவல்துறையினரிடம் சிக்கிய தம்பிகளின் இருசக்கர வாகன சாவிகள் பறிபோயின. அவர்களை கொளுத்தும் வெயிலில் சிறிது தூரம் ஓடி விட்டு வந்து சாவியை வாங்கி செல்ல அறிவுறுத்தினர். மூச்சிரைக்க ஓடி திரும்பிய தம்பிகள் இனி வெளியே வரமாட்டோம் என்று வாகனத்துடன் ஓட்டம் எடுத்தனர்.
கொடுங்கையூரில் வெட்டியாக வேலையின்றி ஊர் சுற்றிய நபர்களை பிடித்து இனிமேல் ஊர்சுற்ற மாட்டோம் என்று கோரஸ் மந்திரத்துடன் தோப்புக்கரணம் போட வைத்தனர் காவல்துறையினர். செங்குன்றம் போலீசாரோ சற்று வித்தியாசமாக சாலையில் சுற்றிய நபர்களை அப்படியே பிச்சைக்காரர்கள் போல சாலையில் அமர வைத்தனர்.

கையில் திருவோடிற்கு பதில் கொரொனா குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வைத்தனர். சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக அமர வைக்கப்பட்ட அந்த ஊர் சுற்றிகள் என் புத்திக்கு உரைக்கும் வகையில் கொரொனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
கையில் தடியை எடுக்காமல் காவல்துறையினர் வள்ளல் போல அள்ளிக்கொடுக்கும் புதிய புதிய தண்டனைகள் மாமன்னர் 23ஆம் புலிகேசியை மிஞ்சும் விதம் என்றாலும், சில்லரை மளிகை வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு சென்று பொருட்களை கொள்முதல் செய்து வர உரிய நேரத்தை காவல்துறையினர் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.






