“அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் 1000 ரூபாய்!!” கொரோனா நிவாரண உதவிகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி!!
கொரோனா பரவலை தடுக்க இன்று மாலை முதல் ஏப்ரல் 1-ந் தேதி காலை வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பணிகளும் முடங்கி, மக்களின் அன்றாட வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதில் அன்றாட வருமானம் ஈட்டுவோரின் நிலை தான் கேள்விக்குறியாக இருந்தது. இதனால் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் அறிவித்தது போல் தமிழக அரசும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 , ஒரு மாத ரேசன் பொருட்கள் இலவசம் என பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணமாக வழங்கப்படும்.
ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூபாய் ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கும் கூடுதலாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்.
100 நாட்கள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு கூடுதலாக இரண்டு நாள் ஊதியம் வழங்கப்படும்.
மார்ச் மாதத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க தவறியவர்கள் ஏப்ரல் மாதத்தில் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் .
வெளி மாநில தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி ‘எண்ணெய், பருப்பு, சர்க்கரை இலவசமாக வழங்கப்படும்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். வீட்டை விட்டு நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடி சூடான உணவு வழங்கப்படும்.
தேவையான இடங்களில் சமையல் கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு . அங்கன்வாடி மையங்களிலும் முதியோர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை .
ரூ.1000 பெற விரும்பாதவர்கள், பொது விநியோகத் திட்ட இணைய தளத்தில் தகவலை பதிவு செய்யலாம் .
நடைபாதை வியாபாரிகள் ஏழை எளிய மக்களின் சூழலை உணர்ந்து ரூ.3250 கோடி நிவாரணம் வழங்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.







