--- --:--:-- --

வெல்லிங்டன் டெஸ்டில் 183 ரன் முன்னிலை பெற்ற நியூசி..!! இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா!!

9625f383-6ffb-438e-9db8-7cfa221e6935

நிழசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 183 ரன்கள் பின் தங்கி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 5 போட்டி கொண்ட டி20 தொடரை 5-0 என வென்று நியூசி.,யை ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு பதிலடியாக 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என வென்ற நியூசிலாந்து இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.இந்நிலையில் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்கமே சரிவாக அமைந்தது. பிரித்விஷா(16), புஜாரா (11), கோஹ்லி ஆகியோர் அடுத்தடுத்து வீழ, இந்திய அணி 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. மயங்க் அகர்வால் (34) ஓரளவுக்கு ரன் சேர்த்து அவுட்டாக, அடுத்து வந்த விஹாரி (7) ஏமாற்றினார்.

 

பின்னர் ரஹானேவும் (38) ரிவுப் பண்ட்டும் சரிவை மீட்க போராடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் சேர்த்திருந்தது. மழை ஓயாததால் எஞ்சிய முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

 

நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் எஞ்சிய 5 விக்கெட்டுகளும் மளமளவென சரிய 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

தொடர்ந்து நியூசிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடியது. இஷாந்த் வேகத்தில் நியூசி., ஓபனர்கள் லாதம் (11), டாம் பிளான் டெல் (30) வீழ்ந்தனர். ஆனால் கேப்டன் வில்லியம்சன் – ராஸ் டெய்லர் ஜோடி நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டதால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸை விட கூடுதல் ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் (89) சதத்தை தவற விட்டு அவுட்டானார்.

 

டெய்லர் (44), நிகோலஸ் (17) ரன்கள் சேர்த்து வெளியேறினர். நியூசி.அணி 71.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 

இந்தியாவை விட 51 ரன்கள் கூடுதல் பெற்ற நிலையில், இன்று 3-ம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து மேலும் 132 ரன்கள் சேர்த்து 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்தியாவைவிட 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதனால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 183 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் 2-வது இன்னிங்ஸை இந்தியா தொடர்ந்தது. ஆனால் இம்முறையும் பிரித்விஷா(14), புஜாரா (11), கேப்டன் கோஹ்லி (19) ஆகிய முன்னணி வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் அவுட்டாகினர். மயங்க் அகர்வால் மட்டும் (58) அரைசதம் கடந்து அவரும் அவுட்டானார்.

 

இதனால் 113 ரன்களுக்கு 4 முன்னணி வீரர்களை இழந்து இந்தியா தடுமாறியது. அதன்பின்னர் ரஹானே (25), ஹனுமா விஹாரி (15) இந்தியாவின் சரிவை தடுக்க போராடினர். இதனால் 3-ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியாவுக்கு இன்னும் 39 ரன்கள் தேவை என்ற நிலையில் 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி நியூசிலாந்துக்கு சாதகமாகவே உள்ளது எனலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon