--- --:--:-- --

காங்., தோற்றது கவலையில்லையோ.? ஆம் ஆத்மி வெற்றியை கொண்டாடுவதா.? அப்ப நம்ம கடையை மூடிடுவோமா..? ப.சி., மீது பிரணாப் மகள் காட்டம்!!

u

டெல்லியில் காங்கிரஸ் சரித்திரம் காணாத படுதோல்வி அடைந்த நிலையில், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பின் மகள் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.தம் கட்சி தோல்வி பற்றி கவலைப்படாமல் அடுத்தவர் வெற்றியை கொண்டாடினால், அப்ப காங்., கட்சியை மூடி விடலாமே என கோபமாக கேட்டுள்ளார்.

 

நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி ஜோராக வெற்றி பெற, பாஜக படுதோல்வி அடைந்தாலும் அக்கட்சியின் வாக்கு வங்கிக்கு மோசமில்லை. ஆனால், காங்கிரசின் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நூறாண்டுகள் கடந்த , டெல்லியிலும் பல முறை கோலோச்சியது. ஷீலா தீட்சித் காலத்தில் டெல்லியில் காங்கிரஸ் அசைக்க முடியாத கட்சியாக திகழ்ந்தது. 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஷீலா தீட்சித் முதல்வர் பதவியை அலங்கரித்தார்.

 

என்றைக்கு ஆம் ஆத்மி கட்சியை கெஜ்ரிவால் ஆரம்பித்தாரோ, காங்கிரசுக்கு வீழ்ச்சிக் காலம் தொடங்கி விட்டது. 2013 -ல் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், அடுத்து 2015-ல் ஆம் ஆத்மியால் ஜீரோவாகி விட்டது. 2015-ல் 9 சதவீத வாக்குகள் பெற்ற காங்கிரஸ், இந்தத் தடவை 4% என்ற படுபாதாளத்துக்கு சென்று, போட்டியிட்ட 66 தொகுதிகளில் 63-ல் டெபாசிட்டை இழந்து பரிதவிக்கிறது.

காங்கிரஸ் இப்படி மோசமான நிலைக்கு சென்றதைப் பற்றி காங்கிரசார் கவலைப்பட்டதாக தெரியவில்லை போலும். பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தி விட்டதை புளகாங்கிதத்தோடு பூரிப்படைந்து வருகின்றனர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை ஏகத்துக்கும் புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த டெல்லி மக்களை வணங்குகிறேன். டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது. பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வகுப்பு வாத அரசியல் திட்டங்களை டெல்லி மக்கள் தோற்கடித்து ஆம் ஆத்மியை வெற்றி பெறச் செய்துள்ளனர் என ஆம் ஆத்மி கட்சிக்கு ப.சிதம்பரம் புகழ் சூட்டியிருந்தார்.

 

இப்படி தங்கள் தோல்வியைப் பற்றி ஆராயாமல் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை காங்கிரஸ் தலைவர்களே கொண்டாடுவதை கட்சியின் மீது உண்மையான அக்கறை கொண்ட பலரும் ரசிக்கவில்லை. காங்கிரசின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்து, ஜனாதிபதி பதவியையும் அலங்கரித்த பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜியோ ப.சிதம்பரம் கருத்து குறித்து கடுமையாக சாடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

“பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பை நாம் ஆம் ஆத்மி கட்சிக்கு விட்டுக் கொடுத்து விட்டோமா?; அப்படியில்லை என்றால், நம்முடைய படுதோல்வி குறித்து கவலைப்படுவதற்கு பதிலாக ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்? அப்படியெனில் மாநில காங். கமிட்டிகளை இழுத்து மூடி விடலாம் தானே? என கடுமையாக பிரணாப் மகள் சாடியுள்ளது, காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.”

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon