தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதனை தமிழில் நடத்த உத்தரவிடக் கோரி தஞ்சை கோவில் வழிபாட்டு உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆகமவிதிகள் தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் பின்பற்றப்படுவதில்லை என்றும் காலத்திற்கு ஏற்றார்போல மாற்றம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. கடைசியாக குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என வாதிடப்பட்டது. கோவிலில் நந்தி மண்டபம் வரை மட்டுமே தமிழ் அனுமதிக்கப்படுகிறது.
இது ஏற்கத்தக்கது அல்ல என்பதால் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யாகசாலையில் இருந்தே குடமுழுக்கு நிகழ்வு தொடங்கும் எனவும் திருமுறைகள் பாட ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆகமங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ஆனால் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டதை ஒரு இரவில் மாற்ற இயலாது என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.






