கண்ணைக்கட்டி சாதனை அசத்தும் பள்ளி மாணவர்
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது 13 வயது மகன் தண்டபாணி. பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவரான இவர் கண்களை துணியால் கட்டிக்கொண்டு சுற்றி உள்ளதை கூறும் அசாத்திய திறமை படைத்தவராக கருதப்படுகிறார்.
கண்ணை கட்டிய நிலையில் தன் முன்னே எந்த ஒரு பொருளை காட்டினாலும் அதனை சரியாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். முறைப்படி இதற்கான பயிற்சியை கற்றுத்தேர்ந்த இவர் தான் படிக்கும் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் திறமையை வெளிப்படுத்தினார்.
கை விரலை காட்டி இது எத்தனை என்று கேட்டபோது சரியாக பதில் கூறியதுடன் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, அவற்றில் வரிசை எண் போன்றவற்றையும் கூறி அசத்துகிறார். இந்த பயிற்சியை இரண்டு மாதத்தில் கற்றுக் கொண்டதாகவும் அரசு அனுமதித்தால் கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுத தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இவருக்கு பயிற்சி அளித்த பிஏ பட்டதாரியான வேல்முருகன் கோவில்களில் பூஜைகள் செய்து வருகிறார். இவர் பல்வேறு தியானமும் விழிகளை நகர்த்துதலை கற்று மாணவருக்கு பயிற்சி அளித்ததாக தெரிவித்துள்ளார்.






