வழிப்பறியை தடுக்க முயன்ற சுங்கச்சாவடி காவலாளி அடித்துக் கொலை
சென்னை ஆவடி அருகே வழிப்பறி கொள்ளையை தடுக்க முயன்ற சுங்கச்சாவடி காவலாளி அடித்துக் கொல்லப்பட்டார். அந்த சாலையில் அடிக்கடி நடைபெற்றுவரும் வழிப்பறி கொள்ளைகளை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் லாரி ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் சுங்கச்சாவடி அருகே வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பது வழக்கம். அப்படித்தான் சென்னை ஆவடி அருகே உள்ள நெமிலிச்சேரி சுங்கச்சாவடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் லாரி ஓட்டுநர் சிவகுமார். அப்போது அங்கு வந்த இருவர் சிவகுமாரை தாக்கி அவரிடம் இருந்த கைபேசி மற்றும் பணத்தை பறித்துள்ளனர்.
அதை கண்ட சுங்கச்சாவடி காவலர் வெங்கடேசன் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து சிவகுமாரை காப்பாற்ற முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொலை நடந்த மூன்று மணி நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் ஜெபா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.
இருவரும் ஒரே இரவில் சிவக்குமார் உட்பட நான்கு பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் இதுபோன்ற வழிப்பறிகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்று கூறுகின்றனர் சுற்றுவட்டார மக்கள்.
மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று லாரி ஓட்டுநர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.






