நாசவேலைக்கு சதித்திட்டம்.? மூவர் கைது – ஒருவர் தலைமறைவு
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் பள்ளி மைதானம் அருகே சிலர் கூடி நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரிடம் 4 பேர் கும்பல் 3 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
கைதான அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கீழக்கரை பகுதியை சேர்ந்த புறாக்கணி என்கிற பிச்சைகனி, கடலூர் மாவட்டம் மணிகண்டன் என்கிற முகமது அலி, விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்கிற முகமது அமீர் என்பது தெரிய வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தப்பியோடிய தேவி பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூது ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீமிற்கு பணம் அனுப்பிய புகாரில் சிக்கியுள்ள கீழக்கரை முகமது ரிபாஸ் என்பவரோடு இன்று கைதான மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கைதான 3 பேரின் செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது வாட்ஸ்அப் மூலம் இளைஞர்களை தொடர்புகொண்டு மூளைச்சலவை செய்து நாசவேலைகளில் ஈடுபட தூண்டியது தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளை பரப்பியதாக கூறப்படும் ஆடியோகளையும் பல்வேறு ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியதாக சொல்லப்படும் நிலையில் 3 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் தேவிபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தப்பியோடிய ஷேக்தாவூதை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






