காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் வந்து கொண்டிருந்த கனரக லாரியும், அந்த வழியே எதிர் திசையில் வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கினர். இதில் காரில் பயணம் செய்த 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து காரணமாக தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தது தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திர போஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் கார் ஓட்டுநர் ஜோகன் என்பது தெரியவந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் சந்திரசேகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






