போகியால் ‘புகை’ மண்டலமான சென்னை..! விமானங்கள் பறக்க முடியல..! முதல்வர் எடப்பாடியும் தவிப்பு!!
போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்தியதால் சென்னை முழுவதும் புகை மண்டலமானது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சேலம் செல்லும் விமானமும் தாமதமானதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணமும் தள்ளிப்போனது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதனால் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, தை பிறப்புக்கு முதல் நாள் போகி கொண்டாட்டத்தின் போது பழைய பொருட்களை கழித்துக் கட்டுவது வழக்கம். சென்னையிலோ இதை ஒரு விழா போல சிறுவர், இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி கொண்டாடுவர். உற்சாக மிகுதியில் டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களையும் தீயிட்டு கொளுத்துவதால், இந்த நாளில் சென்னை நகர மே புகை மண்டலமாகி சுற்றுப்புறச் சூழலும் மாசடைந்து விடுகிறது.
இன்றும் போகியை முன்னிட்டு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தியதால், அதிகாலை முதலே சென்னை நகரை புகை மண்டலம் சூழ்ந்தது. அத்துடன் மார்கழி பனியும் சேர்ந்து கொண்டதால் வானம் முழுவதும் புகை சூழ்ந்தது.
இதனால் சென்னையில் காலை முதல் விமானங்கள் வருகை, புறப்பாடு பாதிக்கப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் 42 சேவைகள் பாதிக்கப்பட்டது. தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூரு, கொச்சின்/ திருச்சி என திருப்பி விடப்பட்டன. புறப்பட வேண்டிய விமானங்களும் பல மணி நேர தாமதமாக புறப்பட்டன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தைப்பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட விமானத்தில் சேலம் கிளம்ப இன்று காலை தயாரானார். இந்த போகி புகை மண்டலம் காரணமாக சேலம் செல்லும் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியது.





