கும்பகோணம் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த இளம்பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் வங்கியில் பயிற்சி பெறுவதற்காக கும்பகோணத்திற்கு வந்திருந்தார்.
ரயில் நிலையத்திலிருந்து தங்குமிடத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நான்கு பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் பலத்த காயங்களுக்கு ஆளான பெண் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
விசாரணையில் கும்பகோணத்தை சேர்ந்த தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசு ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தொடர்புடைய நால்வரும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்தியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி குற்றவாளிகள் நால்வருக்கும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதேபோல குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதத் தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார்.





