தமிழகத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்
2020 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் மக்கள் அதை உற்சாகம் பொங்க வரவேற்றனர். பார்க்கும் அத்தனை முகங்களிலும் பொங்கி வழிந்த உற்சாகம். ஆடல், பாடல் என மகிழ்ச்சியுடன் களை கட்டிய கொண்டாட்டம்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிவகுத்து வந்த மக்கள் மெரினா கடற்கரையில் கூட தொடங்கினார். பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரை என முக்கிய இடங்களில் திரண்ட மக்கள் டுவென்டி டுவென்டிஎன்றழைக்கப்படும் 2020 ஆம் ஆண்டை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
மணி நள்ளிரவு 12 தொட்டதும் ஹாப்பி நியூ இயர் என முழக்கமிட்டு புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனர். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூட புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். தலைநகர் சென்னையை போலவே திருச்சி, தூத்துக்குடி, மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் குறைவில்லாத உற்சாகத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.






