“நாங்களும் திரும்பி அடிப்போம்ல” மே.இ.தீவுகளை துவம்சம் செய்த இந்தியா!! ரோகித், லோகேஷ் அபார சதம்!!
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி 387 ரன்களை குவித்தது.சென்னையில் மே.இ.தீவுகளின் ஹெட்மயர், ஹோப் ஆகியோர் சதமடித்து இந்தியாவை பழி வாங்கியதற்கு பதிலடி தருவது போல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்தும், லோகேஷ் ராகுலும் சதமடித்து கதிகலங்கச் செய்தனர்.
இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி சென்னையில் கடந்த 15-ந் தேதி நடைபெற்றது.இதில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் போலார்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ன்வதற்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழலில் இந்தியா பேட்டிங் செய்தது. அதற்கேற்ப தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித்தும் லோகேஷ் ராகுலும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினர்.மே.இ.தீவுகள் பந்து வீச்சை சிதறடித்த இருவரும் அடுத்தடுத்து சதமடித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்த போது, ராகுல் (102) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனாலும் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித், அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி, 159 ரன்களை குவித்த நிலையில் அவுட்டானார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் -ரிஷப்பன்ட் ஜோடி ஆட்டத்தை கையிலெடுத்து மே.இ.தீவுகள் பந்து வீச்சை கதிகலங்கடித்தனர். ரிஷப் 16 பந்தில் 39 ரன்களும், ஐயர் 32 பந்தில் 53 ரன்களையும் மளமளவென குவித்தனர். இதனால் 50 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.
எனவே வெற்றிக்கு 388 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் மே.இ.தீவுகள் அணி ஆடி வருகிறது.





