கைகொடுத்த ஃபேஸ்புக்! 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு சிறுமி ஃபேஸ்புக்கில் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்து நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடந்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த சிறுமி பவானி.
இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னால் தனது குடும்பத்தினரை விட்டு காணாமல் போயுள்ளார். தவறிப்போன பவானி செய்வதறியாமல் தனது அன்றாட தேவைக்காக பல இடங்களில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது.
அதன் பின்னர் ஜெயா என்ற பெண்மணியால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வந்த பவானி வேலைக்கு சேரும் நோக்கில் ஆந்திராவிலுள்ள வம்சி கிருஷ்ணா என்பவரையும் அணுகியுள்ளார். வீட்டில் யாரைப் பணிக்கு அமர்த்தினாலும் அவர்களின் முழு விபரங்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்வது வம்சியின் வழக்கம்.
அந்த வகையில் பவானியிடமும் அவள் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளார் வம்சி. இதைக் கேட்ட பவானி தனது பிறப்பிடம் விஜயநகரம் என்றும் நான்கு வயதிலேயே தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்வதறியாமல் நின்ற தன்னை விஜயவாடாவில் உள்ள ஜெயா என்பவர் தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும், ஆகவே நீங்கள் எதிர்பார்க்கும் எந்த ஆவணங்களும் தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த கதையை கேட்ட வம்சி பவானியிடம் மீண்டும் நீ உன்னுடைய குடும்பத்தினருடன் வாழ விரும்புகிறாயா எனக்கேட்க, பவானியும் ஆம் என்று பதிலளித்துள்ளார். உடனே வம்சி , பவானியை மீண்டும் அவரது வீட்டாருடன் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளை எடுக்க தொடங்கினார். முதற்கட்டமாக பவானியிடமிருந்த விபரங்களை கைப்பற்றி அவரது பெற்றோரை ஃபேஸ்புக் மூலம் தேடியுள்ளார்.
அப்போது அந்தப் பதிவிற்கு ஒரு பெண் பதிலளித்துள்ளார். அவர் கூறிய விபரங்களும் பவானியின் ஆவணங்களும் பொருந்தி வந்தது. அதன்பின்னர் அந்த நபரை வீடியோ அழைப்பு விடுக்க பவானியும் அவரது பெற்றோரும் பேசியுள்ளனர்.
பவானியின் பெற்றோர்கள் இவர்கள் தான் என உறுதி செய்த வம்சி பவானியை அவரது பெற்றோர் உடனே சேர்த்து வைப்பதற்கு முடிவெடுத்துள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த பவானியின் வளர்ப்புத் தாயான ஜெயா, அதன் பின்னர் இதனை வரவேற்றுள்ளார்.
இது குறித்து பேசிய பவானி பெற்றோருடன் மீண்டும் வாழப்போவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அதற்கு உதவிகரமாக இருந்த பேஸ்புக்கிற்கு நன்றி என்றும் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.





