350 கிலோ வெங்காயம் திருட்டு என விவசாயி புகார்
பெரம்பலூர் அருகே விளை நிலத்தில் இருந்த 350 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் பெரம்பலூரில் ஆண்டுதோறும் 50 முதல் 60 ஆயிரம் டன் வரை சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் நட்டார்மங்கலம் அருகே உள்ள கோதனூர் கிராமத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்ற விவசாயி தனது நிலத்தில் ஆயிரத்து 500 கிலோ சின்ன வெங்காயத்தை பயிரிட்டுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வயலில் இருந்த 350 கிலோ வெங்காயத்தை மூட்டைகளில் கொள்ளையடித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வெங்காயத்தை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெங்காயத்தை இருப்பு வைக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மொத்த விற்பனையாளர்கள் 25 மெட்ரிக் டன்னும், சிறு வியாபாரிகள் 5 மெட்ரிக் டன் அளவு மட்டுமே வெங்காயத்தை இருப்பு வைக்க வேண்டும் என நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு வழங்கல் துறையின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




