காதலனை நம்பிச் சென்ற பெண் மரணம்!
காஞ்சிபுரத்தில் இளம்பெண் ரோஜா என்பவர் இறந்த வழக்கில் அவரது காதலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே ஆன்ட்டி சிறுவல்லுர் கிராமத்தை சேர்ந்த ரோஜா என்ற இளம் பெண் மாற்று சமூகத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்ததாகவும், அந்த காதலுக்கு ராஜேஷின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய ரோஜா 4 நாட்கள் கழித்து சிறுவள்ளூர் என்ற பகுதியில் உள்ள தோப்பில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இறந்துகிடந்தார். தனது மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறை முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சடலத்தை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்தியதையடுத்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரோஜாவின் காதலனை கைது செய்தனர்.

இதனிடையே ரோஜாவின் மரணத்தில் நீதி கேட்டு சமூக வலைதள வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். ஜஸ்டிஸ் பார் ரோஜா என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ள அவர்கள் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரோஜா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் அதனை மறைக்க காவல்துறையினர் முயல்வதாகவும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.





