பழைய ரூ 500 வைத்திருந்த மூதாட்டிகளுக்கு மருத்துவ உதவி!
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல் திருப்பூரில் 46 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த மூதாட்டிகள் இருவருக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பூமலூர் பகுதியை சேர்ந்த தங்கம்மாள், ரங்கம்மாள் சகோதரிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவ செலவிற்கு பணம் இருக்கிறதா என அவர்களது உறவினர்கள் கேட்டுள்ளனர்.
தங்களின் இறுதிக் காலத் தேவைக்காக 46,000 ரூபாய் வைத்துள்ளதாக கூறி அவற்றை கொடுத்துள்ளனர். அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. அவற்றை தற்போது பயன்படுத்த முடியாத செய்தி கேட்டு அவர்கள் கலக்கம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக செய்தியை அறிந்து கொண்ட திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மூதாட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். அத்துடன் அவர்களுக்கு மாதமாதம் முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.





