கார்த்திகை மாதமாம்…! கறி சாப்பாடு கட்; அதிமுக பொதுக்குழுவில் இந்த முறையும் சாம்பார் தான் !!
அதிமுக பொதுக்குழு என்றாலே அதில் பங்கேற்பவர்களுக்கு தடபுடலாக அசைவ விருந்து பரிமாறப்படுவது வழக்கம். ஆனால் கார்த்திகை மாதம் என்பதால் இந்த முறை மதிய விருந்தாக சைவ உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டன.
அதிமுக பொதுச்செயலாள் பொறுப்பில் ஜெயலலிதா இருந்த போது, சம்பிரதாயத்துக்காக வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூடும். பொதுக்குழு என்றாலே மட்டன், மீன், சிக்கன் என வகை வகையான அசைவ அயிட்டங்களுடன் தடபுடலாக விருந்து நடப்பதும் வாடிக்கை.சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கும், ஸ்பெஷல் சைவ சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.இதனால் பந்தி நடக்கும் இடத்தில் அசைவம், சைவம் என தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். பொதுக்குழு நிகழ்வை விட, இந்த விருந்து பற்றிய பேச்சுத் தான் பெரிதாக பேசப்படும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தரப்பில் 2016 டிசம்பர் 30-ந் தேதி ஒரு முறையும், ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து, செப்டம்பர் 12, 2017-ல் ஒரு முறையும் பொதுக் குழு கூடியது.இந்த இரண்டு பொதுக்குழு கூட்டத்திலுமே காலை மற்றும் மதிய சாப்பாடாக சைவ உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டன.
ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தடபுடல் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படாததை நியாயம் என்றே அதிமுக நிர்வாகிகள் கருதினர். ஆனால் ஓபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவிலும் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டதற்கு, அக்கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவிலாவது அசைவ விருந்து தூள் பறக்கும் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால், பொதுக்குழு முடிந்து சாப்பிடச் சென்றவர்கள் அனைவருக்குமே ஒரே விதமான சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டது.
கார்த்திகை மாதம் என்பதாலும், கட்சியினர் பலரும் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள் என்பதாலும் சைவ உணவு மட்டுமே விருந்தில் இடம் பெற்றிருந்தது. வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவை மட்டுமே விருந்தில் இடம்பெற்றிருந்தது. இதனால் அசைவ உணவுப் பிரியர்கள் சற்று ஏமாற்றுத்துடனே இந்த விருந்தை ருசித்தனர் என்றே கூறலாம்.





