--- --:--:-- --

ஸ்தானீக பட்டர்கள் விளக்கம்!

9

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு அந்த உத்தரவை செயல்படுத்ததாத நிலையில், தீபத்தூணியில் ஏன் தீபம் ஏற்றவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அதேபோல் தற்போது ஸ்தானீக பட்டர்கள் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றியது ஏன் என்பது குறித்து விளக்க கடிதம் அளித்துள்ளனர்.

 

 

கார்த்திகை தீபம் திருநாளில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது போல், திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. இதில் கடந்த ஆண்டு, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்,சுவாமிநாதன், தீபத்தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

 

 

கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு இந்த உத்தரவை செயல்படுத்தாத நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இதனிடையே இந்த ஆண்டு கார்த்திகை தீபம் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்கால உத்தரவாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணியில் தீபம் ஏற்ற வேண்டும், என்றும் மாவட்ட ஆட்சியர் இது குறித்து அறிக்கை சாமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

இதன் காரணமாக, கார்த்திகை தீபம் நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணியில் தீபம் ஏற்றப்படுமா என்பது குறித்த பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், மலை முழுவதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் காலை முதலே தொடங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.

 

 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்த மதுரை மாவட்ட ஆட்சியர், ஒரு ஆட்சியராக, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நான் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டேன். அந்த அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். தீபம் ஏற்றப்படவில்லை என்ற பிரச்சினையை எதிர் தரப்பினர் நிச்சயம் எழுப்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, இதைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருவதே சிறந்தது என நான் கருதினேன் என்று கூறியிருந்தார்.

 

 

மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறவும், தீபத்தூணில் தீபம் ஏற்றவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இருப்பினும், அறங்காவலர் குழு 24.11.2026 தேதியிட்ட தனது தீர்மானத்தின் மூலம், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற முடிவு செய்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

 

 

இதனிடையே திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த விவகாரத்திற்கு பதில் அளித்துள்ள ஸ்தானீக பட்டர்கள் விளக்கக் கடிதம் அளித்துள்ளனர். அதில், சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாக அதிகாரி /துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுதலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு, இக்கோயில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக் கொண்டது. நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஓர் கடிதத்தை கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம்.

 

 

நாங்கள் இக்கோவிலில் இன்று நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் கோவிலுக்கு வழங்கவில்லை மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அளித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவின் படி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், உச்சிப்பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவதுதான் வழக்கமான நடைமுறை, சைவ வழிபாட்டு நெறிமுறைப்படியே தீபம் ஏற்றப்படுகிறது. 1996 முதல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. உச்சிப் பிள்ளையார் கோயில், ராஜகோபுரம் ஒரே நேர்கோட்டில் உள்ளது என்றும் தங்களது விளக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon