பாம்பன் கால்வாயில் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் உள்ள சாலை மற்றும் ரயில் பாலம் செயல்பட்டு வருகிறது. பாம்பனில் உள்ள கால்வாய் வழியாக கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு பகுதி கடற்கரை என மாறி மாறி கப்பல்கள் விசைப்படகுகள் கடந்து செல்லும்.பாம்பனில் ஆங்கிலேயர் அமைத்த நூற்றாண்டுகள் கடந்த பழைய ரயில் பாலம் உறுதி தன்மை இழந்ததால் 2019-ம் ஆண்டு இதன் அருகில் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் செங்குத்து தூக்கு பாலத்துடன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது.
இதன்பின் பழைய ரயில் பாலம் அகற்ற டெண்டர் விடப்பட்டு ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து பிப்ரவரி மாதம் முதல் தூக்குபாலத்தினை அகற்றும் பணியை துவங்கியது. டெண்டர் விடப்பட்டதில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக கப்பல்கள் விசைப்படகுகள் கடந்து செல்ல கடல்சார் வாரிய துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
தற்போது தூக்கு பாலத்தினை அகற்றும் பணி 90 சதவீதற்கு மேற்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் இரண்டு வாரத்திற்குள் முழுமையாக அகற்றும் பணி நிறைவடைந்துவிடும் என்பதால் கப்பல்கள் கடந்து செல்ல இடையூறு இல்லை என்பதால் டிசம்பர் மாதம் முதல் கப்பல் கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு பின் கப்பல்கள் மற்றும் விசைப்படகுகள் கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது ராமேஸ்வரம் தீவில் உள்ள மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




