--- --:--:-- --

பெரியார் அறிவுலக ஆங்கில புத்தகங்களிலும் போலி?

9

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தை கடந்த 16 ஆம் தேதி திறந்து வைத்தார்.

 

 

 

இந்நிலையில், பெரியார் அறிவுலக நூலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்வதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிப்படுத்தினார். நூலகங்களுக்கு நூல் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்று இருந்த அவர், ஏ.ஐ உதவியுடன் புத்தகம் தயார் செய்யப்பட்டு, போலியான பதிப்பகம் பெயரில் அச்சிடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில், செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட போலி நூல்கள் அகற்றப்பட்டன.

 

 

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் சர்ச்சைக்குரிய அகல்விளக்கு பதிப்பகத்தில் உள்ள புத்தகங்கள் எத்தனை உள்ளது? அவை எப்போது வாங்கப்பட்டது? அவற்றின் விலை என்ன? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து, தென்காசி மாவட்ட மைய நூலகத்தில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட சுமார் 2,200 போலி புத்தகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புத்தகங்களின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சம் இருக்கும், இவை அனைத்து கடந்த தி.மு.க ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

இந்நிலையில், கோவை பெரியார் அறிவுலகத்தில் பிரபல வின்டேஜ் பிரஸ் லிமிடெட் பதிப்பகம் பெயரில் 100-க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் வாங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லண்டனை சேர்ந்ததாக குறிப்பிடப்படும் இந்த பதிப்பக நூல்களில் சந்தேகத்திற்குரிய அம்சங்கள் இருப்பதாகவும், போலி ஐ.எஸ்.பி.என் (ISBN), முகவரி வழங்கப்பட்டு இருப்பதாகவும், மற்றும் ஏ.ஐ. மூலம் போலிப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

ஆங்கில புத்தகங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வின்டேஜ் பிரஸ் லிமிடெட் (Vintage Press Ltd) பதிப்பக வெளியீடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon