--- --:--:-- --

ரூ.35-க்கு மின்சாரம் வாங்கியது பற்றி செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

images - 2026-10-13T171211.648

தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை சரிசெய்ய தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவதற்கான டெண்டரை மின் வாரியம் இறுதி செய்துள்ளது.

 

 

இதுதொடர்பாக சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி பேசியதாவது, ”தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்பாக பேசாத நாள்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் மின்வெட்டு நடக்கிறது. உச்சபட்மாக தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ரீல்ஸ் ஆட்சி மிக மோசமான நிலையில் இருக்கிறது.

 

 

ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறது தவெக அரசு. அனைத்து துறை சார்ந்த பிரச்னைகளுக்கு பதிலளிக்கும் மின்துறை அமைச்சர், அவர் துறை பிரச்னைகள் பற்றி கேட்டால் பதிலளிப்பதில்லை. ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின்வெட்டு தொடர்பாக எந்த தீர்வும் காணவில்லை.

 

 

 

தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது தற்போதைய மின்துறை அமைச்சர் ஒரு பதிவிட்டிருந்தார். ரூ. 20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் தி.மு.க அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இன்று ரூ. 35-க்கும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. எங்கள் ஆட்சியில் அதிகபட்சமாக ரூ. 20-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஏனெனில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிக தேவை ஏற்பட்டது.

 

இதற்காக டிசம்பர் மாதத்திலேயே டெண்டர் இறுதி செய்யப்படும். அரசு மின் உற்பத்தி நிலையங்களில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே வெளிசந்தையில் கொள்முதல் செய்வோம். இன்றைய அரசு முழுக்க முழுக்க வெளிச் சந்தையில் கொள்முதல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. த.வெ.க ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் 35 சதவிகிதம் தான் உற்பத்தி செய்கிறது.

 

சொந்த உற்பத்தியை குறைத்து, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறார்கள். ரூ.35 கொள்முதல் என்பது ஒரு முறைகேடான கொள்முதல். அதனால் தான் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரை, கலெக்‌ஷன் குமார் என்று வெளிப்படையாக சொன்னேன்” என்றார்.

 

 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் எதிர்பாராவிதமாக 5 மாதங்களுக்கு முன் அமைந்த த.வெ.க. கூட்டணி அரசின் , தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் என்ற மிக, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது!

 

 

ஏற்கனவே த.வெ.க ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கனவே ரூ.1500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்போது சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

 

தேர்தலுக்கு முன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, ‘டெண்டர்’ என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைத்தட்டலை பெற்று. ஆட்சியைப் அமைத்த ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் பொடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு ‘மின் கொள்முதல் ஒப்பந்தம்’ செய்வதில் மிகப் பெரிய ‘மெகா ஊழல்’ நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.

 

 

ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், ”ரூபாய் 35-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் – த.வெ.க-வின் இந்த ஒப்பந்தம், ”மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.

 

 

கடந்த ஆட்சியில் அதிக ஊழலுக்கு வழிவகுத்த குறுகிய கால மின்சாரக் கொள்முதலைக் குறைத்து, மாதத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுப் பேசிய எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல்குமார், அதே குறுகிய காலக் கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி, ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய் கொடுத்து அவசரகதியில் வாங்குவது, “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

 

 

தமிழகம் முழுவதும் அன்றாடம் அரங்கேறும் மின்வெட்டைக் கண்டித்து, முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதிக்கே வந்து போராடிய பின்னரும்கூட, மின் தட்டுப்பாடு இல்லை எனவும், எதிர்க்கட்சிகளின் சதிச்செயல் எனவும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்கள், தற்போது அவசரகதியில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்குவார்களா?

 

 

அதிகப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே மின்சாரம் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதாகத் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய த.வெ.க தலைவர் ஜோசப் விஜய், முதலமைச்சரான பின்பு அதே வெளிச்சந்தையில் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 

 

எனவே, தன் இயலாமையை மறைக்க, அவசரகதியில் வெளிச்சந்தையில் மக்கள் வரிப்பணத்தில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் செலுத்தும் கவனத்தைத் தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், தடையற்ற மின்சாரத்தை விநியோகம் செய்திடவும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் செலுத்திட வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon