அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்
2026 ஏப்ரல் முதல் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். 2013, 2016, 2019, மற்றும் 2023 ஆகிய ஒப்பந்த பலன்களை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி அடிப்படை பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும், இரண்டு விதமான டி.ஏ கணக்கு முறையை மாற்றி அனைவருக்கும் ஒரேமாதிரியான டி.ஏ கணக்கீடு செய்து முறைப்படுத்த வேண்டும், வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.
2003- க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை 12 (3) ஒப்பந்த அடிப்படையில் கழகப் பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி, கரூர் மண்டலம் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி புறநகர் கிளை முன்பு காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி மண்டல தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் சண்முகம், சிவானந்தம், கருணாநிதி, ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜெயராமன் ஆகியோர் பேசினர். அரசு விரைவு போக்குவரத்து கழக மாநில தலைவர் அருள்தாஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுச்செயலாளர் மாணிக்கம், தலைவர் சிங்கராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சி.ஐ.டி.யு புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத் நிறைவுறை ஆற்றினார். நிறைவாக அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொருளாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் நன்றி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





