புதிய நடை மேம்பாலத்தை இணைக்கும் விதமாக 9 லிஃப்ட்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தெற்கு நோக்கிய ரயில் போக்குவரத்தின் மிக முக்கியமான முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் உருவெடுத்துள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கனரக சுமை ஏந்திச் செல்வோர் நடைமேடைகளுக்கும் நடைமேம்பாலங்களுக்கும் இடையே படிக்கட்டுகளைப் பயன்படுத்திச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பயணிகளின் இந்த இன்னல்களுக்குத் தீர்வு காணும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 9 புதிய மின்தூக்கிகள் மற்றும் 10 புதிய நகரும் படிக்கட்டுகளை அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே விரைவுபடுத்தியுள்ளது. புதிய 8 மீட்டர் அகல நடைமேம்பாலத்தையும் நிலையத்தின் நுழைவு வாயில்களையும் இணைக்கும் வகையில் இந்த வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
தற்போது வரை திட்டமிடப்பட்ட 9 மின்தூக்கிகளில் 7 எலிவேட்டர்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் மேற்கு நுழைவு வாயிலில் உள்ள இரண்டு மின்தூக்கிகளுக்கான உரிமம் பெறப்பட்டு, பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நடைமேடைகள் 1-2, 3-4, 9-10 மற்றும் கிழக்கு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட 5 மின்தூக்கிகள் சட்டப்பூர்வ ஆய்விற்கும் உரிமத்திற்கும் காத்திருக்கின்றன; இவை இம்மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள நடைமேடைகள் 5-6 மற்றும் 7-8-இல் உள்ள 2 மின்தூக்கிகளின் பணிகள் நவம்பர் இறுதிக்குள் முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பில்லியன் டாலர் சாம்ராஜ்யம் கட்டியெழுப்பிய 5 இந்தியர்கள்
அதேபோல, புதிய நடைமேம்பாலத்துடன் இணைக்கப்படும் 10 நகரும் படிக்கட்டுகளுக்கான அனைத்து தளவாடப் பொருட்களும் வந்தடைந்துள்ளன. அதில் 5 நகரும் படிக்கட்டுகள் (மேற்கு நுழைவாயிலில் 2, நடைமேடைகள் 3-4இல் 2, நடைமேடைகள் 9-10இல் 1) பொருத்தும் பணி நிறைவடைந்து, நவம்பர் பாதியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 நகரும் படிக்கட்டுகள் டிசம்பர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். பணிகள் அனைத்தும் நிறைவடையும் போது, தாம்பரம் ரயில் நிலையம் ஒட்டுமொத்தமாக 10 மின்தூக்கிகள் மற்றும் 16 நகரும் படிக்கட்டுகளுடன் இயங்கும்.
இருப்பினும், இந்த புதிய வசதிகள் அமைக்கப்பட்டாலும் அவற்றின் முறையான பராமரிப்பு மிகவும் அவசியம் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து பயணிகள் தெரிவிக்கையில், “பல்வேறு நிலையங்களில் இதுபோன்ற வசதிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பழுதடைந்து செயல்படாமல் போய்விடுகின்றன. இதனால் பயணிகள் மீண்டும் படிக்கட்டுகளையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் இவற்றைத் தொடர்ந்து பராமரித்து, பழுதுகளை உடனடியாகச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகள் விரைவில் இந்த வசதிகளைப் பயன்படுத்தும் வகையில் நிறுவல் பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நிலுவையில் உள்ள பணிகள், ஆய்வுகள் மற்றும் உரிமம் பெறும் நடைமுறைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்கக் குழுக்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





