--- --:--:-- --

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை மாநில அரசு தடுப்பது ஏன்?

02

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை மாநில அரசு தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்புக்கு 3-ஆவது மொழியை அமல்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, தமிழ்நாட்டில் 1,500 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ள நிலையில், இந்தியை காரணம் காட்டி, நவோதயா பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு நீதிபதி மகாதேவன் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

 

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிப்ரியா, மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவதாகவும், சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி நாகரத்னா, மும்மொழி கொள்கை என்பது இருக்கலாம்.

 

 

ஆனால், அது 6-ஆம் வகுப்பு முதலே தொடங்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்குவது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தடுப்பது ஏன் என்பது குறித்தும், புதிய அரசின் நிலைப்பாடு பற்றியும் அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Right Menu Icon