தமிழகத்தில் இன்று வெயில் தாக்கம் அதிகரிக்கும்..!
தமிழ்நாட்டில் ஜூலை 16 ஆம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தமிழ்நாட்டில் ஜூலை மாதம் பாதி நாட்களை நெருங்கிய நிலையிலும், வெப்பத்தின் அளவு குறையவில்லை. தென்மேற்கு பருவ மழையும் போதிய அளவில் பெய்யாத நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 16 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றும் நாளையும், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையத்தில் 106, மதுரை நகரில் 105 டிகிரி வெப்பம் பதிவானது.
அதேபோல், திருத்தணி, சென்னை மீனம்பாக்கத்தில் தலா 104, திருச்சி, கடலூரில் தலா 103, பாளையங்கோட்டை, சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், நாகை, ஈரோடு, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, நாமக்கல் ஆகிய இடங்களிலும் வெயில் சதம் அடித்தது. இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






