--- --:--:-- --

வைகோவுக்கு வி.சி.க பொருளாளர் பாலாஜி சூசக கேள்வி..!

3

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே நடைபெற்ற ம.தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1 சதுர அடிக்கு இவ்வளவு கமிஷன் என கணக்கிட்டு லஞ்சம் பெற்றார்கள். கமிஷன், கட்டிங், கரெப்ஷன் மலிந்து காணப்பட்டதால் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர். இதை முதல்வர் விஜய் ஒழித்துவிட்டார் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

 

 

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் வைகோ கடும் கோபமடைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு செய்தியாளர், அப்படியென்றால் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் செய்த தி.மு.க கூட்டணியில் அப்போது ஏன் நீடித்தீர்கள்? ஏன் அப்போது இதுகுறித்து பேசவில்லை? என்று வைகோவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

 

 

இந்தக் கேள்வியால் கோபமடைந்த வைகோ, கூட்டணியில் இருந்துகொண்டு தி.மு.க.வை பற்றிப் பேசுவது அயோக்கியத்தனம். அது அரசியல் தர்மமும் நாகரிகமும் கிடையாது என்று ஆவேசமாகக் கூறினார். அதற்கு அந்த செய்தியாளர், அப்படி பேசாமல் இருந்தது உங்க மனசாட்சிக்கு விரோதமில்லையா? என்று அடுத்த கேள்வியை கேட்க, கூட்டணி தர்மத்துக்காகப் பேசாமல் இருந்தேன். அதில் என்ன தப்பு? அதுதான் சரியான அணுகுமுறை. கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம் பண்ணக் கூடாது என்று வைகோ பதிலளித்தார்.

 

 

தொடர்ந்து அந்த செய்தியாளர் வைகோவை நோக்கி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற திருக்குறளைக் கூறி, நீங்க தி.மு.க ஆட்சியில் இடித்துரைத்திருக்கலாமே, ஏன் இடித்துரைக்கவில்லை? நேற்றிலிருந்துதானே நீங்க பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதனால் கடும் கோபமடைந்த வைகோ, திருக்குறள் எல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். நான் 1330 திருக்குறளும் சொல்வேன் என்று கூறிவிட்டு, அந்த செய்தியாளர் திட்டமிட்டு வந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், நீங்க எந்த பத்திரிகை என்று சொல்லுங்கள் என வைகோ கேட்க, அதற்கு அந்த செய்தியாளர், எந்த பத்திரிகை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று மறுத்தார்.

 

இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற வைகோ, அப்போது உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்க மஞ்சள் பத்திரிகையா? இங்கே திட்டமிட்டு வந்திருக்கிறீர்கள். உங்க பத்திரிகை முதலாளி உங்கள ஏவி விட்டிருக்கிறார். குழப்பம் செய்வதற்காக வந்திருக்கிறீர்கள், இங்கே உங்களுக்கு வேலை கிடையாது, வெளியே போகலாம் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு இருந்த ம.தி.மு.க.வினர் அந்த செய்தியாளரை அரங்கிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

இந்த விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) பொருளாளர் பாலாஜி, வைகோவின் ‘கூட்டணி தர்மம்’ என்ற வாதத்திற்கு எதிராகச் சமூக வலைதளத்தில் சில சூசகமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் தனது பதிவில், கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளைப் பொறுத்துக் கொண்டோம், இப்போது அதைச் சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா? நேற்றைய கூட்டணியைப் பற்றி இன்றுதான் சொல்ல முடியும் என்றால், இன்றைய கூட்டணியைப் பற்றி நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா?

 

நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா? அல்லது தன்னை நம்பிச் சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா? (Alliance Interest? or The Interest of People? Which must be the larger interest?) வைகோவின் இந்த ஆவேசப் பேச்சும், அதற்கு விசிக தரப்பில் இருந்து எழுப்பப்பட்டுள்ள தார்மீகக் கேள்விகளும் தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon