--- --:--:-- --

இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்..!

01

17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தது. இந்நிலையில், 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

 

ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் அல்லது புதிய அரசு பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அரசின் கொள்கைகள், புதிய திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள், எதிர்கால செயல் திட்டங்கள் தொடர்பாக ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார். அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

 

 

மேலும், ஆளுநர் உரையும், ஆளுநர் மாளிகைக்கு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு, முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை.

 

இதனையடுத்து, அந்த வார்த்தைகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே புறப்பட்டு சென்றார். இதே போன்று, 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். பின்னர், அந்த உரையை அப்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் பதிவு செய்தார்.

 

 

கடந்தாண்டும், முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதே சமயம், மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும், ஆளுநர் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் ஆதாரமற்ற பல தகவல்கள் இருந்ததால் வெளிநடப்பு செய்ததாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Right Menu Icon