--- --:--:-- --

நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதலமைச்சர் விஜய்.!

02

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு விஜய், மே 27-ஆம் தேதி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துவிட்டு மறுநாளே சென்னை திரும்பியிருந்தார்.

 

 

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்குத் தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

 

மாலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்திட முதலமைச்சருக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்தித்துப் பேசினார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவையும் முதலமைச்சர் விஜய் சந்தித்தார். இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை வழங்குமாறு வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

 

 

நாளையும் டெல்லியில் தங்கியிருக்கும் முதலமைச்சர், சில தலைவர்களை சந்தித்துவிட்டு மாலையில் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon