தள்ளிப் போகும் ஜன நாயகன் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கி, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டார். தேர்தல் முடிவில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றியைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. அதேவேளையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இருக்கிறார். இந்நிலையில், விஜய் அரசியல் பக்கம் கவனம் செலுத்தியதால் தனது கடைசி படமாக ‘ஜன நாயகன்’ இருக்கும் என அறிவித்தார். இந்தப் படத்தை பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் தணிக்கை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் படம் வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின் ஜன நாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் 5 நிமிட காட்சிகள் மட்டுமே வெளியாகியதாக கூறப்பட்டது. ஆனால், முழுப் படமும் ஆன்லைனில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அழிவின் விளிம்பில் தென் இந்தியாவின் தண்ணீர் தொட்டி: பேராபத்தில் நீலகிரி சோலா காடுகள் அந்நிய நிதி ஆதாரங்களை ஈர்க்க திட்டம்; அரசுப் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரி, எஃப்.ஐ.ஐ வரியை நீக்கியது இந்தியா
பார்க்க தான் சின்னது.
பலனுக்கு பஞ்சமே இல்லை; பூசணி விதைகளை இப்படி யூஸ் செய்யுங்க!
இதுகுறித்து படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகார் அளித்தது. அதன்பேரில், இணையக் குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 9 பேரைக் கைது செய்தனர். இதில் கைதான பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் 6 பேரை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஜன நாயகன் படத்திற்காக வாங்கிய முன் பணத்தை வினியோகஸ்தர்களுக்கத் திருப்பி கொடுக்கவும், நிலுவையில் உள்ள தணிக்கை சான்றிதழ் மற்றும் சட்டரீதியான தடைகள் நீங்கியவுடன் படத்தை சுயாதீனமாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கே.வி.என் புரொடக்ஷன்ஸின் வர்த்தகத் தலைவர் மோகன் சுப்ரித், ஸ்கிரீன் (SCREEN) இதழுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் இருந்தாலும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். சாத்தியமான வெளியீட்டுத் தேதிக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கும் வேளையில், அவர்களைத் தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பது நியாயமற்றது என்று நாங்கள் உணர்ந்தோம்.” என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், ஜன நாயகன் படம் வெளியாகுவதில் நீண்ட காலத் தாமதமானது, விநியோகஸ்தர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள விநியோகஸ்தர்கள், இத்திரைப்படத்திற்காகத் தாங்கள் முதலீடு செய்த நிதிக்கான வட்டிச் செலவுகளாலேயே சுமார் 200 கோடி ரூபாய் வரையிலான இழப்பைச் சந்தித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக் காலத்திலும் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர். ஏனெனில், அப்போது வெளியான வேறு எந்தப் படமும் திரையரங்குகளில் ‘ஜன நாயகன்’ படம் வெளியாகாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈடுசெய்ய முடியவில்லை.
பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகாத காரணத்தால், இங்கிலாந்தைச் சேர்ந்த விநியோகஸ்தர்களான அகிம்சா மற்றும் போலின், முன்பதிவுகளுக்காகச் செலுத்தப்பட்ட சுமார் 8 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஏற்கனவே தள்ளப்பட்டனர். வெளியீட்டுத் தேதி குறித்த நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பணத்தைத் திருப்பிக் கொடுப்பது வேதனையானது என்றாலும் அவசியமானது என்று அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். ஜன நாயகன் திரைப்படத்தின் திரையரங்கு அல்லாத உரிமைகளுக்கான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கே.வி.என் புரொடக்ஷன்ஸின் நிதி நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஜன நாயகன் படம் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், இப்படத்தின் வசூல் திறன் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்றும், இறுதியாக வெளியாகும் போது படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இருப்பினும், ஜன நாயகன் படத்திற்கான வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.





