அருண் ஐ.பி.எஸ் குறித்து சென்னை ஐகோர்ட் காட்டம்..!
கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் ,பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது என தெரிந்தே பயன்படுத்தியுள்ளார் என ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தின் முன்னாள் காவல் ஆணையரும், தற்போதைய ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக இருக்கும் அருண் ஐ.பி.எஸ், ரியல் எஸ்டேட் அதிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ் வர்மா என்பவர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அப்போது சென்னை காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ் இவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் வர்மாவின் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது மகள் வர்ஷா வர்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்,சாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமையில் நேற்று (மே 29) விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்துகொண்ட நீதிபதிகள், சந்தோஷ் வர்மா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது என தெரிந்தே பயன்படுத்தியுள்ளார் என ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2025 செப்டம்பர் மாதம், சந்தோஷ் வர்மாவின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், விசாரணை ஏதுமின்றி எட்டு மாதங்களுக்கும் மேலாகக் கொடுமையான தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அந்த வழக்குகள் போதுமான காரணங்கள் அல்ல. அவரை தடுப்புக் காவலில் வைக்க வேண்டிய அவசரமோ அல்லது கட்டாயத் தேவையோ ஏற்படவில்லை.
அருண் இது போன்ற தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பது இது முதல் முறையல்ல என்று குறிப்பிட்ட நீதிமன்றம், யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் என்கிற ஏ. சங்கர் மற்றும் வாராகி ஆகியோருக்கு எதிராக அவர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவுகளையும் சுட்டிக்காட்டியது. மேலும், 28 வருட அனுபவத்துடன் இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க முடியுமானால், அது வேண்டுமென்றே, சட்டத்தையும் சம்பந்தப்பட்ட உண்மைகளையும் முழுமையாக அறிந்தே செய்யப்பட்டது என்றுதான் அர்த்தம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகியும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதை அருண் ஐ.பி.எஸ் வழக்கமாக வைத்திருந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ் தற்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





