பசுமை எரிசக்தி கழக ஒதுக்கீட்டில் விதிமீறல்..!
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் ஒப்புதல்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 2 உயர் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஓய்வுபெற்ற இயக்குநர் ஒருவரின் ஓய்வூதிய பலன்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தமிழக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த ஆய்வுகளின்போது, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (Tamil Nadu Green Energy Corporation) சமீபத்திய ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டதில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விதிகள் பின்பற்றாமல் மிக அவசரக் கதியிலும், முறையற்ற நிர்வாகத் தலையீடுகளுடனும் இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்துவதற்கும், உரிய நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் ஏதுவாக, முறையற்ற நிர்வாகத் தலையீடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் (வருவாய்) வி. காசி, தலைமைப் பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) சந்திரசேகரன் ஆகிய இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதே குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய, பசுமை எரிசக்தி கழகத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) எஸ். மங்களநாதன் என்பவரின் ஓய்வூதியப் பலன்கள் (Retirement Benefits) அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட இந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டு, மின்வாரிய விதிமுறைகளின்படி அடுத்தகட்ட மேல்நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





